இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 29 அமெரிக்க பொருட்களுக்கு, இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா கடந்த ஆண்டு, இந்தியாவின் ஸ்டீல் மற்றும் அலுமினியம் ஆகிய பொருட்களுக்கு ஏற்றுமதி வரியை உயர்த்தியது. இதனால் அதிருப்தி அடைந்த இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 120 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அறிவித்தது. ஆனால், இரு நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வந்ததால், அதை அமல்படுத்தாமல் தொடர்ச்சியாக தள்ளிப்போட்டு கொண்டே வந்தது.
இதை தொடர்ந்து, அமெரிக்க வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது. மேலும், ஜூன் 5-ஆம் தேதிக்கு பின்னர் இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதற்கு, இந்தியா பெரிதாக பதிலளிக்காமல் இருந்தது. ஆனால் தற்போது, இந்தியாவும் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா இறக்குமதி செய்யும் ஆப்பிள், வால்நட், பருப்பு, உள்ளிட்ட 29 பொருட்களுக்கு வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.